Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

சிம்மம்

    மகம், பூரம், உத்திர நட்சத்திரம் முதல் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், உதய லக்னமாகிய சிம்ம  லக்கனத்தில் பிறந்தவர்களும், சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசிக்கு உரியவர்கள்.

       இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம, ஸ்ப்தம சுத்தாமாதிபதியாகிய சனிபகவான் பஞ்சம ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம்  என்றும் சொல்லப்படும் 5ம் இடத்திற்கு பிரவேசித்து அருள உள்ளார். அஷ்டமஸ்தானாதிபதியாகிய குருபகவான்  தற்பொழுது 3ம் இடத்தில் அருள்புரிந்து வருகிறார். வருகின்ற ஆண்டுகளில் 4 மற்றும் 5ம் இடத்திலும் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

      காட்டுக்கு ராஜா சிங்கம் என்று சிம்மக்குரலோடு சுற்றிவந்து கர்ஜித்த உங்கள் கர்ஜனை இருக்கும்  இடம் தெரியாமல் சத்தமில்லாமல் கடந்த 2 1/2 ஆண்டுகள் போய்  இருக்கும். கடந்த 2 1/2 ஆண்டுகளில்  ஒன்றும் சொல்லிக் கொள்ளும் வகையில் உயர்வை அளித்து இருக்காது. நிறைய துன்பங்களையும், சோதனைகளையும் சமாளித்து கடந்து வந்து விட்டீர்கள்.

   அர்த்தாஷ்டமச்  சனியினால் சிலர் குடும்பத்தில் அமைதியின்மை, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, தொழில் வியாபாரத்தில் லாபக்குறைவு, சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும். உத்யோகத்தில் பதவி இறக்கம், சகஊழியர்கள், மேல் அதிகாரிகளின் விரோதம், வேலைக்கு ஏண்டா போகிறோம் என்று சலிப்பாக இருந்து இருக்கும். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஆறுதலான சமாசாரம், 5ம் இடம் சனீஸ்வர பகவான் சஞ்சாரம் செய்து உள்ளது. உங்கள் துன்பங்களை, வேதனைகளை  மாற்றும் காலமாக சனிபகவான் 5ம் இடத்தில் பிரவேசிக்கிறார். கவலையை விடுங்கள். உங்கள் கஷ்டத்திற்கு வேதனைக்கு  பலன் கிடைக்கப் போகிறது. 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் ஓரளவுக்கு  நல்ல பலன்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

      முன்வைத்த காலை பின் வைக்க முடியாது, முடிக்கவும் முடியாது என்றும் இருந்து இருக்கும். உங்களை கண்முன்னே  முகஸ்துதி பாடிவிட்டு பின் குழியை பறிக்கும் நபர்களை தற்போது உங்களால் கண்டுபிடித்து விலக்கி வைக்க முடியும். மேலும் தனிச்சிறப்பாக சனீஸ்வர பகவானின் பார்வை 11,2 மற்றும் 7 ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றது. குறிப்பாக 7ம் பார்வை, 11ம் இடத்தில் பதிவது கூடுதல் நன்மைகளை தரும் என்றே  சொல்லவேண்டும்.

       5ல் சனிபகவான் மெல்ல மெல்ல நன்மைகளை கொடுப்பார். உங்களை ஒரேயடியாக உயர்த்தி ராஜயோகத்தை கொடுக்காவிட்டாலும் எந்த தொல்லையும் தொடராவண்ணம்  முற்றுப்புள்ளி வைத்து உங்களது வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாத சராசரி  இயல்பு வாழ்க்கையை கொடுப்பவர் . நீங்கள் ஆண்டவன் அருளால் தெளிவாக யோசித்து செயல்படுவீர்கள். மனதில் புத்துணர்ச்சியும் புதிய சிந்தனைகளும் ஏற்படும். சிறு சிறு தடங்கல்கள்  வந்தாலும் சமாளித்து இறுதியில் வெற்றி பெறுவீர்கள். வியத்தகு வகையில் சில சாதனைகள் செய்து புதிய பதவிகளையும், பட்டங்களையும் பெறுவீர்கள். புதிய வழியில் காரியங்கள் ஆற்றி எதிர்கால திட்டத்தை  நல்லமுறையில் அமைப்பீர்கள். சோம்பலை தவிர்ப்பது உயர்வைக் கொடுக்கும்.

    திடீர் என்று கோபப்பட்டு காரியத்தை வீண் அடிக்காமல் இருப்பது உங்கள் கௌரவத்தைக் கூட்டும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள்  படிப்படியாக குறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து அன்போடு வாழ  மனம் விரும்பும். பெரியோர்களிடம் வெறுப்பை பெற்று விலகி இருந்த நீங்கள் பாசத்தோடு அவர்கள் உங்களைத் தேடி  நாடி வந்து அன்பைப் பொழிந்து ஆசி வழங்குவார்கள். பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகைமையை மறந்து இணைவார்கள். உங்கள் மனைவியின் உடல் உபாதைகள் படிப்படியாக குறைந்து பூர்ண ஆரோக்கியம் கிடைக்கும். தாய் தந்தையரை மதிக்கும் நீங்கள் அவர்களின் ஆசியோடு பல சிறப்புகளை பெறுவீர்கள்.

      பொதுவாக நல்ல விஷயங்களைக் கூட நீதியோடு  சொல்லமுடியாத நிலை ஏற்படும். விமர்சனம் செய்வதைத் தவிர்க்கவும். எல்லாம் இருப்பது போலவும் அதே நேரத்தில் இல்லாதது போலவும் உணருவீர்கள். பொருளாதாரத்தில் ஒருவித தேக்கநிலை ஏற்படும். பணத்தேவையை சமாளிக்க கடன் வாங்க வேண்டியும், பின்னர் வாங்கிய கடனை வட்டியுடன் கொடுக்கவும் வேண்டி வரும். ஆகையால் கூடுதல் நேரம் உழைக்க  வேண்டிவரும். இருப்பினும் வருமானம் குறையும் என்று சொல்ல முடியாது. இருப்பதைக் கொண்டு சிக்கனமாக பட்ஜெட்  போட்டு சிறப்பாகப் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

       கணவன் மனைவி இடையே வீட்டின் விஸ்தரிப்புத் தொடர்பாகவும் வாக்கு வாதங்கள் ஏற்படும். பின்னர் மனதில் திட்டமிடல், தன்னம்பிக்கை இவை சேர்ந்து ஆக்கப்பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு மனம் சந்தோஷப்படுவீர்கள். விவாகம் செய்ய பல வரன்கள் வந்தாலும், திருப்தியான, பொருத்தமான வரங்களைத் தேர்ந்தெடுத்து செய்வதில் குழப்பம் நிலவும். பூர்வபுண்ணிய சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் பேசித் தீர்த்து, சுமூகத்திர்வு காண்பிர்கள். சிலர் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று அதன் மூலம் ஸ்திர சொத்துக்களை  பராமரிப்பார்கள். பெண்கள் வரவுக்கேற்ற செலவுக்குத் தங்களை தயார் செய்து கொண்டு குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார்கள்.

      இருப்பினும் சில இல்லத்தரசிகள் பிரச்சனைகளை மனக்கசப்பை தவிர்க்கும் பொருட்டு தனிக்குடித்தனம் செல்ல கணவனை நிர்பந்திப்பார்கள். மனைவி சொல்லே மந்திரம் என்று சில சமயம் சிறிது காலம் தனிக்குடித்தனம்  இருந்து விட்டு, மீண்டும் சில மாதங்கள் கழித்து பெற்றோர்கள், சகோதரர்களோடு இணைந்து கூட்டு குடும்பமாக வாழ்க்கையை தொடர்வார்கள். குருபகவான் தற்போது 3ம் இடத்தில் இருப்பதால் இது போன்ற பிரச்சனை இருந்தாலும்  உங்கள் ராசிநாதன் சூரியபகவானுக்கு குருபகவான் நட்பு கிரஹம் என்பதால் அவரின் அப்பார்வையால் பரவசப்படுத்தி இறுதியில் மகிழ்ச்சியை கொடுப்பார்.

      எந்த விஷயத்தை எடுத்தாலும் ஒரு சந்தேகப் பார்வையை சனிபகவான் அவ்வப்போது உண்டு பண்ணுவார். ஆகையால்  உங்களின் அதிவேக செயல்திறன் குறையும். செயல்திறன் குறைவதால் அனைத்திலும் ஆர்வம் குறையும். ஆகையால் பணவரவு குறையும்.

   வருகின்ற 4.10.2018 முதல் குருபகவான் 4ம் இடத்திற்கு பிரவேசித்து அருள் புரிகிறார். 4ம் இடம் சுகஸ்தானம் அர்த்தாஷ்டம  குரு ஓரளவுக்கு நன்மைகளை பலன்களை கொடுப்பார். வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும் உத்தியோகம்  வியாபாரம் என்று பல வகையில் அலைச்சல்கள் இருந்தாலும் மாறுதல்கள் மனதை திருப்திப்படுத்தும். பகைமை தென்பட்டாலும், பல இடங்களில் நட்பு வட்டாரம் துணை நின்று வாட்டத்தை  போக்கி உங்கள் ஓட்டத்தை கூட்ட துணை நின்று வெற்றியை தரும். உங்களால் தான் சில காரியங்களை செயல்படுத்த முடியும் என்று சமூகத்தில் தனி  முத்திரை பதிப்பீர்கள்.

    இருப்பினும் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்துடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் எடுக்கமுடியும். பிறர் எடுக்கும் முடிவு உங்களுக்கு பொருந்தாது. நீங்களே எடுக்கும் முடிவு எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக  ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் அனுசரணையாக இருப்பதால் உயர் அதிகாரிகளின்  கரிசனப்பார்வை அவ்வப்போது உங்கள் மீது இருக்கும் வெளிநாட்டுத் தொடர்புகள்  பலன் கொடுக்கும்.

      வியாபாரிகள் முதலீடு செய்யும்  முன் யோசித்து செய்வது நல்லது. சக  வியாபாரிகளுடன் கலந்து பேசுவது, வியாபாரத்தை விரிவுபடுத்த உதவும். உறவினர்களின் உதவி ஊக்கத்தைக்  கொடுக்கும். பங்காளிகளின் பகை உணர்வு முன்பைவிட குறைவாக மன  ஆறுதலைக் கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலை கவனமாக கையாள வேண்டும். விவசாயிகள் அரசு மானியத்தில் உதவிகள் பெற்று புதிய போர், பம்புசெட் அமைத்து விவசாயம்  செய்து லாபம் பெறுவார்கள். கால்நடைகள் பராமரிப்பதில் கூடுதல் கவனம் தேவை. பெற்றோர்களின் தேக  ஆரோக்கியத்தில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டால் அவர்களின் ஆசியைப் பெறமுடியும். முன்பை விட அலைச்சல் குறைந்தாலும் போட்டியின் காரணமாக ஓய்வு எடுக்கும் நேரம் குறையும்.

    வருகின்ற 13.2.2019 முதல் ஆரோக்கிய காரகனான ராகுபகவான் 11ம் இடத்திற்கும் ஞான காரகனான கேதுபகவான் 5ம் இடத்திற்கும் பிரவேசித்து அருள உள்ளனர். ராகுபகவான் 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலம் நன்மையே. அரசாங்கத்தின் வாயிலாக வியாபாரிகள், தொழில் துறையினர் நன்மைகளை பெறுவார்கள். மேலும் விவசாயிகள்  இழப்பீடு மானியம் போன்றவற்றைவைகளையும் பெறுவார்கள். வேற்று மத நண்பர்களால் அனுகூலம்  ஏற்படும். பெண்களுக்கு புதிய ஆபரண சேர்க்கை திருப்தி தரும்.

    ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து வீட்டிற்கு கூடுதல் அழகு சேர்ப்பீர்கள். வழக்குகளில் சிக்கி தவித்தவர்கள் அதில் வெற்றி பெற்று விமோசனம் பெறுவீர்கள். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்தி ஆனந்தப்படுவீர்கள். போட்டி பந்தயங்கள் அனைத்திலும் உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லிவைத்து துள்ளி குதித்து குதூகல வெற்றியை பெறுவீர்கள்.

      கேதுபகவான் 5ம் இடத்தில் இருப்பதால் குழந்தைகள் நடவடிக்கை கண்காணிப்பது அவர்களின் எதிர்காலத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மையைக் கொடுக்கும். சிலர் குழந்தைகளின் படிப்புக்காக கூடுதல் பணம் செலவு செய்ய நேரும். பெண்கள் காதல் போன்ற விஷயங்களில் மனதை பறிகொடுக்காமல் பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வது ஆசியையும், நன்மையையும் பெற்று தரும்.

        சிலர் தலைவலி, ஜுரம் போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை பெற நேரும். குடும்பப் பாரம், பிரியத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து போற்றி பாதுகாத்து மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்துடன் ஷேத்திராடம் செல்வது, மஹான்களின் ஜீவசமாதியை தரிசிப்பது போன்றவை மனோதிடத்தை கூட்டும். பூர்விக சொத்துக்களின் மூலமாக ஆதாயம் கிடைக்கும்.

      வருகின்ற 29.10.2019 முதல் குருபகவான் 5ம் இடத்திற்கு பிரவேசிக்கிறார். குடும்பத்தில் லட்சுமி கடாக்ஷம் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம், பணப்புழக்கம், பொருள் வரவு உண்டாகும். திருமண முயற்சிகள் அனைத்தும் சுபமாக முடிந்து தேதி குறித்தல், பத்திரிகை அடித்தல், மண்டபம் பதிவு செய்தல் என்று அடுத்த கட்டத்திற்கு நகரும். சுப முகூர்த்தத்தில் திருமணம் நடைபெறும். வம்சவிருத்தி ஏற்படும்.

      உடல் ஆரோக்கியம் கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோக உயர்வு, மேலதிகாரிகளின் ஆதரவு என்று அனைத்தும் சந்தோஷ தருணங்களாக மாறும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அமோக விளைச்சலால் விவசாயிகள் லாபம் பெறுவார்கள்.

      மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். விரும்பிய பாடத்தினை விரும்பிய இடத்தில் படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், பெருமை, கௌரவம், பதவி என அனைத்தும் கிடைக்க  உங்கள் ராசிநாதன் சூரியபகவான் மற்றும் குருபகவான் அருள்புரிவார்.

      பொதுவாக இந்த காலகட்டத்தில் உங்கள் சுபாவத்தில் இருந்து சற்றே மாறி அனைவரின் ஆலோசனைகளையும்  பின்பற்றறாவிட்டாலும், சான்றோர்கள், அனுபவசாலிகளை மதித்து இறைவன் மீது  நம்பிக்கையுடன் கண்முன்னே பிரகாசிக்கும் உங்கள் ராசிநாதனை தினமும் கைகூப்பி காலையில் வணங்கி சூரிய  நமஸ்காரம் செய்து வழிபடுங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற இயற்கை உணவை உண்டு ஆரோக்கியத்தை பேணுங்கள். சூரிய பகவானைப்போல் பிரகாசமான வாழ்வை பெறுவீர்கள்.

      ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக சனீஸ்வர பகவான் வருகின்ற 27.12.2020 அன்று மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். அன்றிலிருந்து சுமார் 3 ஆண்டுகள் பொன்னான காலமாக அமையும். அதுவரை பொறுத்திருங்கள். மிக அருகில் வெற்றி வாய்ப்புகளும் புகழும் உங்களுக்காக காத்து இருக்கின்றது. சனீஸ்வரபகவான்  அருளால் நீடுழி சிறப்புடன் வாழ்க என பிரார்த்தனை செய்கிறோம்.

     அனைத்து கிரஹ  அமைப்புகளையும் பார்க்கும் பொது சுமார் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களும் நடைபெறும் வாய்ப்புள்ளது.

பரிகாரம்

    குலதெய்வ வழிபாடு அவசியம். இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம். திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு நல்லண்ணெய்  அபிஷேகம் செய்து காக்கைக்கு அன்னம் வைத்தல் அவசியம்.

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter